அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போயிருக்கிறது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரச்சனையில் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் தங்கள் ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க விஜய்க்கு இதெல்லாம் புதுசு கிடையாது. இதற்கு முன்பே அவர் ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து தான் வந்திருக்கிறார் என அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
அதில் இதுவரை விஜய் படங்கள் சந்தித்த பிரச்சனைகளை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை படம் தான் முதன்முதலில் பிரச்சினையை சந்தித்தது. ஆரம்பத்தில் கீதை என்ற தலைப்பில் தான் படம் வெளியாக இருந்தது ஆனால் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் புதிய கீதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியானது.
சுறா படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடித்த காவலன் பட ரிலீசிலும் பிரச்சனை வந்தது. விநியோகஸ்தர் ஒருவர் சுறா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிட மாட்டோம் என கூறினார் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை முடிந்து காவலன் படம் வெளியானது.
அதை அடுத்து துப்பாக்கி படம் வெளியாகும் சமயத்தில் கள்ளத் துப்பாக்கி பட குழுவினர் தலைப்பை வைத்து பிரச்சனை செய்தார்கள். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி படம் ஒரு வழியாக வெளியானது. ஆனால் முஸ்லிம்களை தவறாக சித்தரித்த காரணத்திற்காக எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் சில காட்சிகள் நீக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தலைவா படமும் பிரச்சனைகளை சந்தித்தது. விஜயின் அரசியல் பிரவேசம் இதன் மூலம் ஆரம்பிக்கும் என்ற கருத்து பரவலாக இருந்தது. அதைத் தொடர்ந்து தியேட்டர்களுக்கு மிரட்டல்களும் வந்தது.
உடனே விஜய் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு அவர் வீடியோ வெளியிட்டது, தலைப்பில் டைம் டு லீட் என்ற வரிகள் நீக்கப்பட்டது அனைத்து சங்கதியும் அனைவரும் அறிந்ததுதான்.
அதன் பிறகு கத்தி பட ரிலீசில் பிரச்சனை வந்தது. தயாரிப்பு நிறுவனமான லைக்கா இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் எனக் கூறி சிலர் போர்க்கொடி தூக்கினார்கள். கதை திருட்டு பிரச்சனையிலும் படம் சிக்கியது இதையெல்லாம் தாண்டி தான் கத்தி வெளியானது.
அடுத்ததாக புலி படம் வெளியாகும் போது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதனால் படம் தாமதமாக வெளியானது.
இதைத் தொடர்ந்து மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்களுக்கு எதிராக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகள் கிளம்பியது. அதேபோல் சர்க்கார் படத்தின் கதை வேறு ஒருவருடையது என பிரச்சனை கிளம்பியது.
அதன் முடிவில் சமரசம் பேசப்பட்டு பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது. அடுத்து பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் வன்முறை அதிகம் இருந்தது தொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியது.
மேலும் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோதல்கள் மாஸ்டர் படப்பிடிப்பில் வருமானவரித்துறையினர் விஜய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றது என இவருடைய படங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது.
அதனால் ஜனநாயகன் பஞ்சாயத்து பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி படம் வெளியாகி பெரிய வசூலை அடையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.