விஜயின் கடைசி படமாக உருவாகி இருக்கும் ஜனநாயகன் படம் வரும் ஒன்பதாம் தேதி ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் தற்போது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்குப் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக வெளிப்படையான பேச்சுக்களும் ஒரு பக்கம் இருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் ரிலீஸ் தள்ளிப் போகும் அளவுக்கு இருக்காது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் தற்போது சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இன்று அதை விசாரித்த நீதிபதி இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்தார்.
அதன்படி கடந்த மாதம் தணிக்கை சான்றிதலுக்காக சென்ற இப்படத்தை பார்த்த குழுவினர் சில காட்சிகளை நீக்க சொல்லியும், சில இடங்களில் மியூட் செய்ய சொல்லியும் இருக்கின்றனர்.
பட குழுவும் அதை அப்படியே செய்திருக்கின்றனர். ஆனாலும் தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. இதை அடுத்து தொடர்ந்த வழக்கில் இரு தரப்பும் தங்களுடைய பக்க நியாயங்களை நீதிபதி முன் வைத்துள்ளனர்.
அதை விசாரித்த நீதிபதி நாளை தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே தணிக்கை குழுவில் இருக்கும் நபர் ஒருவர்தான் படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இதை அடுத்து வேண்டுமென்றே விஜய்க்கு எதிராக சதி செய்யப்படுவதாக அவருடைய கட்சியினரும் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் படம் சில வாரங்கள் தள்ளிப் போகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இருந்தாலும் சாதகமான தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் ஒரு பக்கம் அவர்கள் காத்திருக்கின்றனர். இப்படியாக விஜய்யின் கடைசி படம் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.