விஜய்யின் கடைசி படம் என்ற முத்திரையோடு பொங்கலை அலங்கரிக்க இருந்த ஜனநாயகன் இப்போது கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
இன்று வெளியாகி இருக்க வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் தள்ளி போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் திட்டமிட்ட சதி என அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு இருக்கிறது.
அதே சமயம் மாநில அரசு மீதும் சிலர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இந்நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் படத்திற்கு யு ஏ சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அந்த மனுவை திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நீதிபதி எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன் என கூறி ஒரு கொட்டு வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஜனநாயகன் பொங்கலை தவற விடுமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் திங்கட்கிழமை விசாரணையில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிப் போகும் நிலை ஏற்படலாம்.
அப்படி என்றால் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு தான் மீண்டும் விசாரணைக்கு வரும். அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் விடுமுறை. அதனால் படம் அடுத்த வாரம் திரைக்கு வருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் விஜய் ஆதரவாளர்களும் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் திரையுலகமும் ஜனநாயகன் எப்போது வருகிறதோ அப்போதுதான் பொங்கல் திருவிழா என காத்திருக்கிறது.