ஒரு காலம் வரும் அப்போ அஜித் தான் என்னுடைய படத்தில் நடிக்கணும்னு தேடி வருவாங்க.!

0
ajith-thala
ajith-thala

அக்டோபர் மாதத்தின் கடைசி நாள். ஆண்டு 2013. ஆரம்பம் ரிலீஸ். அதிகாலை காட்சி முடிந்து ஆரவாரமாக ரசிகர்கள் வெளிவருகிறார்கள். அவர்களுக்கு இடையே அந்த பிரபலமான தயாரிப்பாளரும் இருந்தார். வெளியே வந்தவர் தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டிருந்த வானுயர கட்டவுட்டுக்கு சல்யூட் வைத்தார். உணர்வுவசப்பட்டு சத்தமாகவே சொன்னார்.

நீ வெறும் நடிகன் இல்லேய்யா. இண்டஸ்ட்ரியோட பாடிகார்ட். காணாம போன தயாரிப்பாளனை கண்டுபிடிச்சி, மறுபடியும் லைஃப் கொடுத்தே பாரு. நீதான்யா ரியல் மாஸ். அஜீத்தின் மாஸ் இமேஜ் என்பது வெறுமனே திரையில் அவர் காட்டும் திறமையில் மட்டுமல்ல. திரைக்கு வெளியேயான அவரது நடவடிக்கைகளிலும் உருவானது. எதிரியாக இருந்தாலும், அவர் துயரத்தில் இருந்தால் அஜீத்தின் மனசுக்கு தாங்காது.

அவரை பற்றி படுமோசமான கிசுகிசு எழுதிய பத்திரிகையாளரின் ஆபரேஷனுக்கு யாரும் கேட்காமலேயே உரிய நேரத்தில் மருத்துவ கட்டணம் செலுத்தி காப்பாற்றியவர் அவர். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாத அளவுக்கு வள்ளல் தன்மை கொண்டவர். உடன் பணியாற்றும் திரைத்தொழிலாளிகளிடம் பெரிய ஹீரோ என்கிற பந்தாவெல்லாம் காட்டாமல் பழகுபவர். தன்னுடைய படத்தை முதலில் ரசிகர்கள்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவரது படங்களுக்கு வி.ஐ.பி. காட்சிகளோ, பிரிவியூ காட்சிகளோ கூடாது என்று கண்டிப்பாக இருப்பவர்.

19- வயதில் என் வீடு-என் கணவர் திரைப்படத்தில் பள்ளி மாணவராக அட்மாஸ்ஃபியருக்கு வந்து போனபோது, அவரே நினைத்திருக்க மாட்டார், மிகப்பெரிய இடத்தை இதே தமிழ் சினிமாவில் தான் பெறப்போவதை. பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட அஜீத்குமாருக்கு மோட்டார் பைக்கின் விர்ரூம் விர்ரூம் சப்தம் மீது அத்தனை ஈர்ப்பு. ஆரம்பத்தில் மெக்கானிக், பிறகு தொழில்முறை பைக் பந்தயக்காரர் என்று தன் லட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென சினிமா குறுக்கிட்டது.

எம்.ஜி.ஆர், அமிதாப், ரஜினி, கமல் என்று அவரது ஆதர்சமான ஹீரோக்களின் துறையிலேயே பணிபுரிய வாய்ப்பு என்கிறபோது, அதை மறுக்க மனமில்லை. துரதிருஷ்டவசமாக அவர் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தெலுங்கு படத்தின் இயக்குநர் திடீரென காலமாக, அஜீத்தின் திரைப்பிரவேசம் தள்ளி போனது. தொடர்ச்சியாக விளம்பரங்களில் மாடலாக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் 1992-ல் தன்னுடைய 21-வது வயதில் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.

அஜீத், முதலும் கடைசியுமாக நடித்த தெலுங்கு படம் அது மட்டுமே. ஆனால், அவர் இரண்டாவதாக நடித்த தமிழ் படமான அமராவதிதான் முதலில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அவர் சொந்த குரலில் பேசவில்லை. அவருக்கு குரல் கொடுத்தவர் விக்ரம். அமராவதிக்காக அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ரூ.390/- அடுத்தடுத்து பாசமலர்கள், பவித்ரா என்று அவர் படங்கள் நடிக்க தொடங்கினாலும், திடீர் பைக் விபத்தின் காரணமாக அவை தாமதமாயின. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள், முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது.

மீண்டும் மும்முரமாக படப்பிடிப்புக்கு வந்தவர் ஏற்று கொண்ட படங்களை மடமடவென்று நடித்து கொடுத்தார். விஜய் ஹீரோவாக நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் சிறு வேடத்தை ஏற்று நடித்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யோடு மீண்டும் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தபோது, சில காரணங்களால் அது நிறைவேறாமல் போனது.

1995-ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட ஆசைதான் அஜீத்துக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஹீரோயினை ஃபாலோ செய்து, லவ் புரபோஸ் செய்து கொண்டிருக்க போகிறீர்கள்? என்று அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அஜீத் சொன்ன பதில், அவருடைய தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இப்போ, நான் மத்தவங்க கிட்டே சான்ஸ் கேட்கிற நிலைமையில் இருக்கேன். அதனாலே அவங்க சொல்ற கேரக்டரில்தான் நடிக்க வேண்டியிருக்கு. ஒரு காலம் வரும். அப்போ, அஜீத்தான் நம்ம படத்துலே நடிக்கணும்னு கேட்டு வருவாங்க. அப்போ, நான் விரும்பற கேரக்டர்களில் நடிப்பேன். அந்த காலம் அடுத்த ஆண்டே வந்தது. அகத்தியனின் காதல் கோட்டை, அஜீத்துக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே பெரும் ஏற்றமாக அமைந்தது.

அமிதாப்பச்சன் தமிழில் படம் தயாரிக்க முன் வந்தபோது, அஜீத்தைத்தான் நடிக்க வைக்க விரும்பினார். அந்த படம் உல்லாசம். இந்த படத்தில்தான் முதன்முதலாக அஜீத்துடைய சம்பளம் பத்து லட்சத்தைத் தொட்டது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஒரு பாடலில் கமல்ஹாசன் பின்னணி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதன்பிறகு வணிக வெற்றி தோல்விகள் மேடும் பள்ளமுமாக மாற்றி மாற்றி அஜீத், ஸ்டெடியாக முன்னேறிக் கொண்டிருந்தார். காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம் என்று ஹீரோக்களின் ஹிட் லிஸ்ட்டில் தவிர்க்க முடியாத இடத்தை எட்டினார். அமர்க்களம் நாயகி ஷாலினியை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்தோடு கரம்பிடித்தார்.

திருமணத்துக்கு முன்பான அஜீத் நிறைய உணர்வுவசப்படுவார். பத்திரிகையாளர்களிடம் வெள்ளந்தித்தனமாக அனைத்தையும் அப்படியே கொட்டிவிடுவார். இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் பல. ஷாலினி, தன் கணவர் அஜீத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டார். ஒரு தனி மனிதராக மிக தெளிவான முடிவுகளை எடுக்க கூடியவராக இன்று அஜீத் மாறி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தனக்கு இனி ரசிகர் மன்றமே தேவையில்லை என்று அவர் அறிவித்தபோது, இனி அஜீத் அவ்வளவுதான் என அனைவரும் பேசினார்கள். ஆனால், தன் ரசிகர்களை சமூகத்துக்கு நற்பணி செய்யக்கூடிய தொண்டர்களாக மாற்றி இன்றும் தன் மாஸ் லெவலை அப்படியே தக்க வைத்து கொண்டிருக்கிறார். இரண்டாயிரங்களின் துவக்கத்தில் அஜீத்தின் திரைவாழ்வில் ஏற்பட்ட சரிவுகளை தீனா சரி கட்டியது. அதுவரை அல்டிமேட் ஸ்டாராகவும், ஆணழகன் அஜீத்குமாராகவும் இருந்தவரை தல ஆக்கியது.

அடுத்து வில்லன், வரலாறு படங்கள் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையையும் அழுத்தமாக பதியவைத்தார். பில்லாவுக்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் டானாக மாறினார். மங்காத்தா அவரை சிகரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அவரை ஓப்பனிங் கிங் என்று வர்ணிக்கிறார்கள். திரையுலகில் வெறும் வெற்றியை மட்டுமே ருசித்து கொண்டிருப்பவர்கள் உச்சத்துக்கு போவதில்லை. அவ்வப்போது தோல்விகளாலும் புடம் போடப்படுபவர்கள்தான் நீண்ட காலத்துக்கு ஜொலிக்கிறார்கள்.

இன்று அஜீத் படம் வெளிவருகிறது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரை துறையே விழாக்கோலம் பூணுகிறது. அஜீத் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது என் முகம் தெரிந்தால் போதும் என்று நடிகர்கள் சொல்கிறார்கள். தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு அவரது படங்களில் பணியாற்றுகிறார்கள். தியேட்டர்களில் கல்லா பெட்டி நிரம்புகிறது. வினியோகஸ்தர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இது போதாதா?