சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்

0
216

சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்

தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஷ்ணு ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடித்திருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம். இப்படத்திலும் ஜெயித்தாரா பார்ப்போம்.

silukkuvarpatti singam
silukkuvarpatti singam

கதை

பயந்தாங்கொள்ளி கான்ஸ்டபலாக இருக்கும் விஷ்ணு(சத்யமூர்த்தி) முறைப்பெண் ரெஜினாவுடன் காதல் செய்துகொண்டு சிலுக்குவார்பட்டியில் சுற்றிவருகிறார். அதேநேரம் சென்னையில் அசிஸ்டண்ட் கமிஷ்னரை நடுரோட்டில் சுட்டுக்கொன்றுவிட்டு சாய்ரவி(சைக்கிள் சங்கர்) தலைமறைவாக இருக்கிறார்.

முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலைசெய்ய சென்னையிலிருந்து வரும்போது சிலுக்குவார்பட்டியில் ஒயின்ஸாப்பில் குடிக்கிறார். அங்கு நடக்கும் கலவரத்தில் விஷ்ணு ஆப்பாயிலை தட்டிவிட்டதற்காக வில்லனை யார் என தெரியாமல் பொளந்துகட்டி ஸ்டேஷனில் உட்காரவைக்கிறார்.

silukkuvarpatti singam
silukkuvarpatti singam

வில்லன் ஆட்கள் ஸ்டேஸனுக்குள் நுழைந்து போலிசை அடித்துவிட்டு வில்லனை கூட்டி செல்கின்றனர். தன்னை சாதாரண கான்ஸ்டபல் அடித்து அவமானப்படுத்தியற்காக விஷ்ணுவை கொல்லத்துடிக்கிறார்.வில்லன் பெரிய ரவுடி என தெரிந்ததும் அவரிடமிருந்து தப்பிக்க மாறுவேடங்களில் சுற்றும் விஷ்ணு தைரியமானாரா அவரை கைது செய்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய

வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தையடுத்து மீண்டும் முழுக்க காமெடிகதையில் நடித்து அசத்துகிறார் விஷ்ணு. பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் காதலி முன்பு கெத்தை விடாமல் நடிப்பது வில்லனுக்கு பயந்து விதவிதமான கெட்டப்பில் அசத்துவது என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

ரெஜினா வழக்கமான கதாநாயகிகளின் வேலையைத்தான் செய்கிறார். இரண்டு பாடலுக்கு ஆடிவிட்டுசெல்கிறார். ஓவியாவும் நடித்துள்ளார்.பிக்பாஸ்க்கு பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக கனகா கதாபாத்திரத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடி இரண்டு காட்சிகளில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

காமெடி படம் என்பதால் காமெடியன்களுக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள். கருணாகரன், சிங்கமுத்து, லொல்லுசபா மனோகரன் என பலரும் காமெடியில் கலக்குகின்றனர்.பாட்ஷா படத்தில் ஆம்னி இந்திரனாக மிரட்டிய ஆனந்த்ராஜ் இதில் ஷேர் ஆட்டோ சந்திரனாக காமெடி செய்துள்ளார்.

யோகிபாபு தான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கியுள்ளார். வில்லன் கூடவே வந்து சீரியசான காட்சிகளில் கூட கவுண்டர் கொடுத்து படம் முழுவதும் அனைவரையும் கலாய்த்து தள்ளுகிறார்.

silukkuvarpatti singam
silukkuvarpatti singam

வில்லனாக வரும் சாய்ரவியும் சீரியஸ் வில்லன், காமெடியாக அடிவாங்கும் கதாபாத்திரம் என சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.முதல் 20 நிமிடம் கொஞ்சம் போரடித்தாலும் கதைக்குள் நுழைந்ததும் படம் முழுவதும் சிரிப்பு சத்தத்தோடு நகர்கிறது.

படம் காமெடியாக இருந்தாலும் எதுவுமே புதிய காட்சியாக தோன்றவில்லை. பல காட்சிகள் ஏற்கனவே பார்த்து பழகிய சுந்தர்சி, எழில் போன்றவர்களின் காமெடி படங்கள் கண்முன்னே வந்து செல்கிறது.

ரசித்தது

படம் முழுவதும் ஒட்டியிருக்கும் காமெடி காட்சிகள். யோகிபாபு, சிங்கமுத்துவின் காமெடி அதிகம் ரசிக்க வைக்கிறது.படம் முடிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு வைத்திருக்கும் பாட்ஷா படத்தின் ஆனந்த்ராஜின் ப்ளாஷ்பேக் காட்சி

முதல் 20 நிமிடம் கொஞ்சம் சோதிக்கிறது.பார்த்து பழகிய கதை, க்ளைமேக்ஸ் சேஷிங்வரை பல காட்சிகளும் ஏற்கனவே பார்த்த அனுபவத்தை கொடுக்கும். மொத்தத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கத்தை குடும்பத்துடன் பார்த்து ஒருமுறை சிரித்து வரலாம்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் : 2.75/5