`இப்போ நாங்க நல்ல நண்பர்கள்’. மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். – லலிதா குமாரி

0
187

`இப்போ நாங்க நல்ல நண்பர்கள்’. மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். – லலிதா குமாரி | Actress Lalitha Kumari Talks About her Personal Life Actor Prakash Raj’s Friendship

`இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். அந்த அன்பு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. பொண்ணுங்களின் படிப்பு உட்பட எங்க மூவரின் எல்லாத் தேவைகளையும் நிறைவா செய்துகொடுக்கிறார்.”

Actress Lalitha Kumari Talks About Prakash Raj's
Actress Lalitha Kumari Talks About Prakash Raj’s Relationship

கே.பாலசந்தரின் `மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அறிமுகமானவர், லலிதா குமாரி. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர். நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்தில் ஆர்வமாகப் பணியாற்றிவருகிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு மீடியாவில் விகடன் வழியே மனம் திறக்கிறார், லலிதா குமாரி.

“அப்பா ஆனந்தன் சினிமாவில் புகழுடன் இருந்தவர். என்னோடு பிறந்தவங்க 7 பேர். என் அக்கா டிஸ்கோ சாந்தி, அண்ணன் அருண்மொழிவர்மன் (கேமராமேன்), நான் மூவரும் சினிமாவில் வொர்க் பண்ணினோம். `மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அறிமுகமானபோது, சினிமா பற்றி பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. காமெடி ரோல்களில்தான் அதிகம் நடிச்சேன். `கர்ணா’ என்னுடைய கடைசிப் படம். பிரகாஷ்ராஜுடன் திருமணம். பூஜா பிரகாஷ் ராஜ், சூர்யா சித்தார்த் பிரகாஷ் ராஜ், மேக்னா பிரகாஷ் ராஜ் என மூன்று குழந்தைகள். கணவர் சினிமாவில் பிஸியாக இருந்ததால், நான் குடும்பப் பொறுப்புகளைப் பார்த்துக்கிட்டேன். 2004-ம் வருஷம், உடம்பு சரியில்லாமல் பையன் உயிரிழந்தது, எனக்கும் அவருக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்துச்சு. இப்போ, சினிமாவைவிட்டு விலகி 23 வருஷம் ஆகுது. இடைப்பட்ட காலங்களில் பல வாய்ப்புகள் வந்தும், சொல்லிக்கிற கேரக்டர்களாக இல்லை. ஆனாலும், நடிகர் சங்க நிர்வாகிகளுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அந்த நண்பர்களின் அன்பு தொடருது. சினிமாவில் நடிக்கவில்லையென்றாலும், சினிமா உலகத்துடன்தான் இருக்கேன்.

சிங்கிள் மதரா இருக்கிறதை சவால்னு என்னைக்குமே நினைச்சதில்லை. பெரிய பொண்ணு பூஜா, பி.ஏ., படிக்கிறாங்க. சின்னப் பொண்ணு மேக்னா, எட்டாவது படிக்கிறாங்க. சின்னப் பொண்ணை ஸ்கூல், டியூஷன் கூட்டிட்டுப்போறது, இருவரின் தேவைகளை நிறைவேற்றி வழிகாட்டுவதுதான் பிரதான வேலை. அதுக்குப் பிறகுதான் மற்ற விஷயங்களைக் கவனிக்கிறேன். எனக்கு ஈவன்ட் பிளானர் வேலைகளில் அதிக ஈடுபாடு. என்னுடைய `நட்சத்திரா மீடியா வொர்க்ஸ்’ கம்பெனி மூலம் சினிமா மற்றும் பல துறைகளுக்கான நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்வுகளை நடத்திக்கொடுக்கிறேன். அப்படி, மலேசியாவில் நடந்த தமிழ்த்திரைத் துறையினரின் நட்சத்திர கலைவிழா ஏற்பாடுகளை நடத்திக்கொடுத்தேன். இதுபற்றி நிறைய பேருக்குத் தெரியாது” என்கிறார் லலிதா குமாரி.

நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான அன்பைப் பகிர்கையில், “நாங்க தம்பதியா வாழ்ந்தது அழகான காலகட்டம். ஒருகட்டத்தில் உறவில் விரிசல் வந்து, விவாகரத்துப் பெற்றோம். அவர், இன்னொரு திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டார். நான், இரண்டு குழந்தைகளுடன் தனி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். நாங்க இருவருமே முதிர்ச்சியான சிந்தனையுடன் எடுத்த முடிவு அது. பழைய விஷயங்களை நினைச்சு வருத்தப்பட எதுவுமில்லை. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் எப்போதும் அன்பு, மரியாதை இருக்கு. இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். அந்த அன்பு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. பொண்ணுங்களின் படிப்பு உட்பட எங்க மூவரின் எல்லாத் தேவைகளையும் நிறைவா செய்துகொடுக்கிறார். விடுமுறை நாள்களில் பொண்ணுங்க அப்பாவின் வீட்டுக்குப் போயிருவாங்க. அவரோடு அவுட்டிங் போவாங்க. அவர் சென்னைக்கு வரும்போதும் மகள்களைச் சந்திப்பார். நான் கடைசியா நடிகர் சங்க நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவரை நான் நேரில் சந்திக்கிறது குறைவா இருந்தாலும், பொண்ணுங்க எதிர்காலம் குறித்த ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசிப்போம்.

அவர் நல்ல கதைகளை தேர்வுசெஞ்சு நல்லா நடிக்கிறார். விருதுகள் வாங்கிறார். மக்கள் சார்பாக தைரியமாக ஆட்சியாளர்களை விமர்சிக்கிறார். சமூக நிகழ்வுகளில் கவனம் செலுத்துறார். அவரின் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போதும் நல்லா இருக்கணும். எல்லோரும் நல்லா இருக்கணும். எந்தச் சண்டையும் கோபமும் இல்லாம அன்போடு வாழணும். இதுதான் நான் நினைக்கும் விஷயங்கள். மற்றபடி, எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பிரச்னையை நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருந்தால், நிம்மதி இருக்காது. தீர்வும் கிடைக்காது. நமக்குனு இருக்கிறவங்களுக்காக, வாழ்க்கையை வாழணும். அப்படித்தான் வாழ்ந்துட்டிருக்கேன்” எனப் புன்னைக்கிறார் லலிதா குமாரி.